Wednesday, December 23, 2009

30 வகை கத்தரிக்காய் சமையல்

கத்தரிக்காய் சாம்பார்

தேவையானவை: நீளமாக நறுக்கிய கத்தரிக்காய் – ஒரு கப், துவரம்பருப்பு – அரை கப், புளி – எலுமிச்சை அளவு, மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு – கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

வறுத்து அரைக்க: தனியா – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 5, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, எண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம், கடுகு – கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன்.

செய்முறை: துவரம்பருப்பை குக்கரில் குழைய வேகவைத்து எடுக்கவும். வறுக்கக் கொடுத்துள்ளவற்றை அரை டீஸ்பூன் எண்ணெயில் வறுத்து, நைஸாக அரைக்கவும். புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து, அதில் உப்பு, மஞ்சள்தூள் போட்டு கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும் கத்தரிக்காயை அதில் போட்டு பெருங்காயத்தூள் சேர்க்கவும். கத்தரிக்காய் வெந்ததும் அதில் அரைத்த மசாலாவை சேர்க்கவும். நன்றாகக் கொதித்ததும் வேகவைத்த துவரம்பருப்பைக் கடைந்து அதில் சேர்த்து, கொதிக்க வைத்து இறக்கவும். கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

——————————————————————————–

கத்தரிக்காய் பொடிதூவல்

தேவையானவை: நீளமாக நறுக்கிய கத்தரிக்காய் – ஒரு கப், புளி – கொட்டைப்பாக்களவு, மஞ்சள்தூள், கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

வறுத்து அரைக்க: தனியா – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்,

செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ளவற்றை சிறிது எண்ணெய் விட்டு சிவக்க வறுத்து சற்று கரகரப்பாக அரைக்கவும். புளியை ஒன்றரை கப் தண்ணீரில் கரைத்து மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் நறுக்கிய கத்தரிக்காயை போட்டு வேகவைத்து எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து அதில் வேகவைத்த கத்தரிக்காயை போட்டுக் கிளறி, கடைசியாக பொடியை தூவி, கிளறி இறக்கவும்.

——————————————————————————–

கத்தரிக்காய் பொரித்த கூட்டு

தேவையானவை: பொடியாக நறுக்கிய கத்தரிக்காய் – ஒரு கப், பாசிப்பருப்பு – கால் கப், நெய் – ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் – தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள், கடுகு – தலா கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

அரைக்க: தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, கறிவேப்பிலை – சிறிது.

செய்முறை: ஒரு கடாயில் பாசிப்பருப்புடன் மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும். பருப்பு முக்கால் பதம் வெந்ததும் அதில் நறுக்கிய கத்தரிக்காய், உப்பை சேர்க்கவும். காய் வெந்ததும் அதில் அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்து சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும். நெய்யில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து சேர்க்கவும்.

——————————————————————————–

கத்தரிக்காய் பிட்லை

தேவையானவை: குண்டாக நறுக்கிய கத்தரிக்காய் – ஒரு கப், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து – கால் கப், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், கடுகு – தலா கால் டீஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், புளி – எலுமிச்சை அளவு, கறிவேப்பிலை – சிறிது, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

மசாலா: தனியா, தேங்காய் துருவல் – தலா 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6.

செய்முறை: மசாலா பொருட்களை வறுத்து அரைத்து வைக்கவும். கடலைப்பருப்பு, துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்க வும். புளியை ஒரு கப் நீரில் கரைத்து, உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். கொதி வர ஆரம்பித்ததும், கத்தரிக்காயை சேர்க்கவும். கத்தரிக்காய் வெந்ததும், வேகவைத்த பருப்பையும், அரைத்த மசாலா வையும் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி, கடுகு, பெருங்காயத்தூள், கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

——————————————————————————–

கத்தரிக்காய் மிக்சட் மசாலா பொரியல்

தேவையானவை: நறுக்கிய கத்தரிக்காய், கோவைக்காய், கேரட், உருளைக் கிழங்கு, குடமிளகாய் – தலா கால் கப், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், மஞ்சள்தூள், கடுகு – தலா கால் டீஸ்பூன்.

வறுத்து அரைக்க: மிளகு – அரை டீஸ்பூன், கடுகு, சீரகம் – தலா கால் டீஸ்பூன், மிளகாய் – 4, தனியா – 2 டீஸ்பூன், பட்டை – ஒரு துண்டு.

செய்முறை: வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வெறும் கடாயில் சிவக்க வறுத்து பொடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளித்து, அதில் எல்லா காய்கறிகளையும் போடவும். மஞ்சள்தூள், உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும். காய்கள் முக்கால் பதம் வெந்ததும் அதில் வறுத்து அரைத்த பொடியைப் போட்டு நன்றாகக் கிளறி இறக்கவும்.

——————————————————————————–

கத்தரிக்காய் உப்புமா

தேவையானவை: அரிசி ரவை – - ஒரு கப், பொடியாக நறுக்கிய கத்தரிக்காய் – கால் கப், தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், துவரம்பருப்பு – 2 டீஸ்பூன், மிளகு, சீரகம், கடுகு – தலா அரை டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – 1, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: துவரம்பருப்பு, மிளகு, சீரகத்தை அரைத்துக் கொள்ளவும். குக்கரில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து தேங்காய் துருவல், கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும். 2 நிமிடம் வதங்கியதும் 2 கப் தண்ணீர் விட்டு உப்பு சேர்க்கவும். கொதிக்க ஆரம்பித்ததும் அதில் அரைத்த பொடி, அரிசி ரவையை போட்டு மிதமான தீயில் நன்றாகக் கிளறி, சிறிது கெட்டியானதும் குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.

——————————————————————————–

எண்ணெய் கத்தரிக்காய்

தேவையானவை: சிறிய கத்தரிக்காய் – 12, புளி – எலுமிச்சை அளவு, தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், நல்லெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கத்தரிக்காயை நான்காக கீறி பூச்சி இருக்கிறதா என பார்த்துக் கொள்ளவும். புளியை கரைத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, கறி வேப்பிலை, பெருங் காயத்தூள் தாளித்து, கத்தரிக்காயை போட்டு பிய்ந்து விடாமல் மிதமான தீயில் வதக்கவும். கத்தரிக்காய் வதங்கி யதும் சாம்பார் பொடியை சேர்க்கவும். பிறகு நன்றாக வதக்கி புளி தண்ணீரை ஊற்றி, உப்பு, மஞ்சள்தூள் சேர்க்க வும். இவை நன்றாக சேர்ந்து கொதித்ததும் எண்ணெய் பிரிந்து மேலே வரும்போது தேங்காயை நைஸாக அரைத்து ஊற்றி, கொதிக்க விட்டு இறக்கவும்.

——————————————————————————–

வாங்கிபாத்

தேவையானவை: பொடியாக நறுக்கிய கத்தரிக்காய், வடித்த சாதம் – தலா ஒரு கப், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு, தனியா – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, கறிவேப்பிலை – சிறிது, மஞ்சள்தூள், கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து அதில் கத்தரிக்காயை போட்டு வதக்கவும். பிறகு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து சுருள வதக்கி இறக்கவும். சிறிது எண்ணெயில் தனியா, காய்ந்த மிளகாயை வறுத்துப் பொடிக்கவும். சாதத்தில் சிறிது உப்பு, வறுத்த அரைத்த பொடி, வதக்கிய கத்தரிக்காய், எலுமிச்சைச் சாறு என எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.

——————————————————————————–

கத்தரிக்காய் துவையல்

தேவையானவை: பெரிய கத்தரிக்காய் – 1, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 5, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், புளி – கொட்டைப் பாக்களவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: கத்தரிக்காயை எண்ணெய் தடவி சுட்டெடுக்கவும். ஆறியதும் தோலுரித்து, உள்ளே பூச்சியில்லாமல் உள்ளதா என பார்த்து மசித்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும். வறுத்தவற்றை மிக்ஸியில் போட்டு பொடித்து, பிறகு புளி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மசித்த கத்தரிக்காயையும் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

——————————————————————————–

கத்தரி முருங்கை மசாலா

தேவையானவை: நறுக்கிய கத்தரிக்காய், முருங்கைக்காய் – தலா ஒரு கப், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, புளி – கொட்டைப்பாக்களவு, எண்ணெய் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள், கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன்.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, அதில் கத்தரிக்காய், முருங்கைக்காயை போட்டு, உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறி, புளியை கால் கப் தண்ணீரில் கரைத்து விட்டு நன்றாகக் கலந்து மூடி விடவும். அவ்வப்போது கிளறி விடவும். வெந்ததும் தண்ணீர் வற்றி விடும். மிதமான தீயில் சுருளக் கிளறி இறக்கவும்.

——————————————————————————–

கத்தரிக்காய் தயிர் பச்சடி

தேவையானவை: பெரிய கத்தரிக்காய், பச்சைமிளகாய், காய்ந்த மிளகாய் – தலா 1, தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, கடுகு, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய் – ஒரு டீஸ்பூன், தயிர் – ஒரு கப்.

செய்முறை: கத்தரிக்காயில் எண்ணெய் தடவி சுட்டெடுக்கவும். ஆறியதும் தோலுரித்து உள்ளே பூச்சியில்லாமல் உள்ளதா என்று பார்த்து மசித்துக் கொள்ளவும். பச்சைமிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். மசித்த கத்தரிக்காயில் அரைத்த விழுது, உப்பு சேர்த்து தயிருடன் கலந்து கடுகு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் தாளித்து சேர்க்கவும்.

——————————————————————————–

கத்தரிக்காய் கொத்சு

தேவையானவை: நறுக்கிய கத்தரிக்காய் – ஒரு கப், நறுக்கிய தக்காளி, பாசிப்பருப்பு – தலா அரை கப், பச்சைமிளகாய் – 3, புளி – கொட்டைப்பாக்களவு, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், கடுகு – தலா கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிது.

செய்முறை: பாசிப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேகவைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, பச்சைமிளகாய், கத்தரிக்காய், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். கத்தரிக்காய் சிறிது வதங்கியதும், புளியைக் கரைத்து ஊற்றவும். பிறகு வேகவைத்த பருப்பு, உப்பு சேர்த்து மிதமான தீயில் நன்றாக கொதிக்க விடவும். பிறகு கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். தேவையெனில் சிறிது வெங்காயமும் சேர்த்துக் கொள்ளலாம்.

——————————————————————————–

கத்தரி-காராமணி பிரட்டல்

தேவையானவை: நறுக்கிய கத்தரிக்காய் – ஒரு கப், காய்ந்த காராமணி – கால் கப், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, தேங்காய் துருவல், தனியா – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிது, சீரகம், கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன்

செய்முறை: காராமணியை முதல்நாள் இரவே ஊறவைத்து, மறு நாள் குக்கரில் வேக வைக்கவும். கத்தரிக்காயை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக விடவும். முக்கால் பதம் வெந்ததும் வடிதட்டில் கொட்டவும். தேங்காய் துருவல், தனியா, காய்ந்த மிளகாயை அரைத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, கத்தரிக்காயை போடவும். பிறகு வெந்த காரமணியை போட்டு வதக்கி அரைத்த விழுதையும் சேர்த்துக் கிளறி இறக்கி, கொத்தமல்லியை தூவவும்.

——————————————————————————–

கத்தரிக்காய் பஜ்ஜி

தேவையானவை: வட்டமாக நறுக்கிய கத்திரிக்காய் – ஒரு கப், கடலைமாவு – அரை கப், அரிசிமாவு – ஒரு டேபிள்ஸ்பூன், கார்ன் ஃப்ளார் – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், சமையல் சோடா – ஒரு சிட்டிகை, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: கடலைமாவு, அரிசிமாவு, கார்ன்ஃப்ளார், உப்பு, சமையல் சோடா, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து, அதிலிருந்து ஒரு டீஸ்பூன் எடுத்து மாவில் ஊற்றிக் கலந்து, பிறகு தண்ணீர் ஊற்றிக் கலக்கவும். இப்படி செய்தால் பஜ்ஜி அதிகம் எண்ணெய் குடிக்காது. கரைத்த மாவில் கத்தரிக்காய் வில்லைகளை தோய்த்து எடுத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

——————————————————————————–

கத்தரிக்காய் காரக்குழம்பு

தேவையானவை: நறுக்கிய கத்தரிக்காய், வெங்காயம் – தலா அரை கப், தனியாத்தூள், மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், புளி – எலுமிச்சை அளவு, உப்பு – தேவையான அளவு, நல்லெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, வெந்தயம் – அரை டீஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, வெல்லம் – சிறிதளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து, வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். பிறகு தனியாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கியதும் புளியை கெட்டியாக கரைத்து ஊற்றி, கொதிக்க ஆரம்பித்ததும் கத்தரிக்காயை போடவும். நன்றாக கொதித்து கத்திரிக்காய் வெந்து, குழம்பில் எண்ணெய் பிரிந்து வரும் போது வெல்லத்தை போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

——————————————————————————–

கத்தரி – மொச்சை கூட்டு

தேவையானவை: நறுக்கிய கத்தரிக்காய் – ஒரு கப், மொச்சை, துவரம்பருப்பு – தலா கால் கப், தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், சாம்பார் பொடி – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள், கடுகு – கால் டீஸ்பூன், எண்ணெய், பொட்டுக்கடலை – ஒரு டீஸ்பூன், புளி – எலுமிச்சை அளவு, உப்பு – தேவையான அளவு

செய்முறை: மொச்சையை முதல்நாள் இரவே ஊறவைத்து, மறுநாள் வேக வைத்துக் கொள்ளவும். துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் வேகவிடவும். புளியை நன்றாகக் கரைத்து உப்பு சேர்த்து கொதிக்க விடவும். கொதித்ததும் கத்தரிக்காயை அதில் போடவும். காய் நன்றாக வெந்ததும் அதில் வேகவைத்த மொச்சையை போடவும். பிறகு சாம்பார் பொடி சேர்த்து 2 நிமிடம் கொதித்ததும் அதில் வேகவைத்த துவரம் பருப்பை சேர்த்து தேங்காய், பொட்டுக்கடலையை அரைத்து விடவும். கடைசியாக கடுகு, கறிவேப்பிலை தாளித்து இறக்கவும்.

ஸ்டஃப்டு கத்தரிக்காய்

தேவையானவை: சிறிய கத்தரிக்காய் – 15, தேங்காய் துருவல், எண்ணெய் – அரை கப், காய்ந்த மிளகாய் – 5, புளி – கொட்டைப் பாக்களவு, உப்பு – தேவையான அளவு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், கடுகு – தலா கால் டீஸ்பூன், தனியா – ஒரு டேபிள் ஸ்பூன்

செய்முறை: தனியா, தேங்காய், உப்பு, காய்ந்த மிளகாய், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், புளி எல்லாவற்றையும் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். கத்தரிக்காயை நான்காக பிளந்து பூச்சியில்லாமல் இருக்கிறதா என பார்த்து, அரைத்து வைத்திருக்கும் மசாலாவை கத்தரிக்காயில் அடைத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, ஸ்டஃப்டு கத்தரிக்காய்களை போட்டு கிளறி மூடி வைக்கவும். மிதமான தீயில் கிளறி, எண்ணெய் பிரியும்போது இறக்கவும்.

——————————————————————————–

கத்தரி வதக்கல்

தேவையானவை: நறுக்கிய கத்தரிக்காய் – ஒரு கப், நறுக்கிய வெங்காயம் – அரை கப், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள், கடுகு – தலா கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, புளி – கொட்டைப்பாக்களவு, எண்ணெய் – 3 டீஸ்பூன்

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து, வெங்காயத்தை போட்டு வதக்கவும். பிறகு கத்தரிக்காயை போடவும். உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, புளியை கெட்டியாக கரைத்து விடவும். நன்றாக வதக்கி எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும். விருப்பட்டால் புளிக்கு பதிலாக தக்காளி சேர்க்கலாம்.

——————————————————————————–

ரசவாங்கி

தேவையானவை: சின்ன பிஞ்சு கத்தரிக்காய் – 10, தக்காளி – 2, துவரம்பருப்பு, தனியா – தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு, நெய் – தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், கடுகு – தலா கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, சீரகம் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, புளி – கொட்டைப்பாக்களவு, கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிது

செய்முறை: புளியை நீர்க்கக் கரைத்து உப்பு சேர்த்துக் கொதிக்க வைக்கவும். கத்தரிக்காயை நான்காக நடுவில் சீவி முழு கத்தரிக்காயாக புளி தண்ணீரில் போடவும். தக்காளியையும் பொடியாக நறுக்கி போடவும். துவரம்பருப்புடன் மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் வேக விடவும். தனியா, சீரகம், மிளகு, மிளகாய் ஆகியவற்றை வறுத்து, சற்று கரகரப்பாக பொடித்து கத்தரிக்காய் வெந்ததும் அதில் சேர்க்கவும். துவரம்பருப்பை கடைந்து ஊற்றி, பொங்கி வந்ததும் இறக்கி, நெய்யில் கடுகு தாளித்துக் கொட்டவும். கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.

——————————————————————————–

பருப்பு – கத்தரி பொரியல்

தேவையானவை: பொடியாக நறுக்கிய கத்தரிக்காய் – ஒரு கப், பாசிப்பருப்பு – கால் கப், தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை: பாசிப்பருப்பில் சிறிது மஞ்சள்தூள் சேர்த்து குழைய விடாமல் வேகவைத்து வடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, கத்தரிக்காய், உப்பு சேர்த்து வதக்கவும். காய் வதங்கியதும், வேகவைத்த பாசிப்பருப்பை போட்டு துருவி வைத்த தேங்காயையும் சேர்த்து இறக்கவும்.

தேங்காய் எண்ணெயில் செய்தால் சுவை இன்னும் கூடுதலாக இருக்கும்.

——————————————————————————–

கத்தரிக்காய் தளர்கூட்டு

தேவையானவை: பொடியாக நறுக்கிய கத்தரிக்காய் – ஒரு கப், புளி – கொட்டைப் பாக்களவு, சாம்பார் பொடி – அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், அரிசி மாவு, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, கறிவேப்பிலை – சிறிது.

செய்முறை: புளியை நீர்க்கக் கரைத்து உப்பு சேர்த்து கொதிக்க விட்டு, கத்தரிக்காயை அதில் போடவும். நன்றாக வெந்து குழைந்தவுடன் அதில் சாம்பார் பொடியை போட்டு, அரிசி மாவை தண்ணீரில் கரைத்து விட்டு கொதித்ததும் இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள், பச்சைமிளகாய், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

——————————————————————————–

கத்தரிக்காய் சிதம்பரம் கொத்சு

தேவையானவை: நறுக்கிய கத்தரிக்காய் – ஒரு கப், நறுக்கிய சின்ன வெங்காயம் – அரை கப், தனியா – 3 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6, வெந்தயம், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கீறிய பச்சைமிளகாய் – 2, புளி – 2 கொட்டைப் பாக்களவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு, கறிவேப்பிலை— – சிறிதளவு.

செய்முறை: கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, தனியா, காய்ந்த மிளகாய், வெந்தயம் போட்டு வறுத்து, பொடித்து வைத்துக் கொள்ளவும். மீண்டும் கடாயில் எண்ணெய் விட்டு, கத்தரிக்காயை வறுத்து எடுத்து வைக்கவும். பிறகு வெங்காயத்தை வதக்கி, கீறிய பச்சைமிளகாயையும் மஞ்சள்தூளையும் சேர்க்கவும். வெங்காயம் சுருள வதங்கியதும் அடுப்பை அணைத்து விட்டு அதில் புளியை கெட்டியாக கரைத்து விட்டு, உப்பையும் போடவும். வறுத்துப் பொடித்த பொடியை போட்டு, கடைசியாக வறுத்து வைத்த கத்தரிக்காயை போட்டு நன்றாகக் கலந்து, கறிவேப்பிலையை மேலே தூவவும்.

——————————————————————————–

கத்தரிக்காய் அடை

தேவையானவை: மிகவும் பொடியாக நறுக்கிய பிஞ்சு கத்தரிக்காய், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, பச்சரிசி, புழுங்கலரிசி – தலா கால் கப், உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6, இஞ்சி – ஒரு துண்டு, தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை: பருப்பு, அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து காய்ந்த மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, தேங்காய் துருவல், பெருங்காயத்தூள் உப்பு சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும் (விருப்பப்பட்டால் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை மாவில் கலந்து கொள்ளலாம்). இந்த மாவில் நறுக்கிய கத்தரிக்காயை கலந்து தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, இரண்டு புறமும் திருப்பிப் போட்டு எடுக்கவும்.

வித்தியாசமான சுவையில் இருக்கும் இந்த அடை.

——————————————————————————–

கத்தரிக்காய் கிரேவி

தேவையானவை: குண்டாக நறுக்கிய கத்தரிக்காய், பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம் – தலா ஒரு கப், புதினா, கொத்தமல்லி – சிறிது, பச்சைமிளகாய் – 2, கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, தனியாத்தூள் – ஒரு டீஸ்பூன், கடுகு, சீரகம் – தலா கால் டீஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தக்காளி, வெங்காயம், புதினா, கொத்தமல்லி, பச்சைமிளகாய் போட்டு லேசாக வதக்கி தனியே வைத்து ஆற விடவும். எண்ணெயில் கத்தரிக்காயை வறுத்து வைத்துக் கொள்ளவும். கடுகு, சீரகம் தாளித்து அதில் ஆற வைத்த தக்காளி – வெங்காய கலவை, கரம் மசாலாத்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். கடைசியாக வறுத்தெடுத்த கத்தரிக்காயை சேர்த்து கிளறி இறக்கவும். மேலே கொத்தமல்லியை தூவி அலங்கரிக்கவும்.

——————————————————————————–

கத்தரிக்காய் மோர்க் குழம்பு

தேவையானவை: நீளமாக நறுக்கிய கத்தரிக்காய் – கால் கப், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, தனியா – தலா ஒரு டீஸ்பூன், கடுகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன், வெந்தயம் – கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் – 5, கொத்தமல்லி – சிறிது, தேங்காய் துருவல் – 2 டீஸ் பூன், தயிர் – ஒரு கப், புளி – கொட்டைப்பாக்களவு, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்.

செய்முறை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பை ஊறவைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு வெந்தயத்தை சிவக்க வறுத்து, அதில் ஊறவைத்த பருப்புகளை சேர்க்கவும். இதனுடன் தனியா, பச்சைமிளகாய், சீரகம், தேங்காய், கொத்தமல்லி சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். புளியை கரைத்து உப்பு சேர்த்து, கத்தரிக்காயை போட்டு வேக விடவும். வெந்ததும் அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க விடவும். பிறகு, மஞ்சள்தூள் சேர்த்து கடைந்து இறக்கவும். தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

——————————————————————————–

கத்தரிக்காய் புளி பஜ்ஜி

தேவையானவை: பெரிய குண்டு கத்தரிக்காய், காய்ந்த மிளகாய் – தலா 1, புளி – கொட்டைப்பாக்களவு, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், துவரம்பருப்பு – அரை டீஸ்பூன், பச்சைமிளகாய் – 2, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கத்தரிக்காயை எண் ணெய் தடவி நன்றாக எல்லா பக்கமும் சுட்டெடுக்-கவும். ஆறியதும் தோலுரித்து பூச்சியில்லாமல் மசித்துக் கொள்ளவும். இதில் புளியை கரைத்து விடவும். கடாயில் எண்ணெய் காயவைத்து அதில், கடுகு, துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய், பச்சைமிளகாய், பெருங்காயத்தூள் போட்டு தாளித்து மசித்த கத்திரிகாயை போட்டு நன்றாகக் கலக்கவும் அதை ஒரு கிண்ணத்தில் கொட்டி ஒரு சூடான பாத்திரத்தின் மேல் வைத்து மூடிவிடவும்.

——————————————————————————–

கத்தரி -மிளகாய் பச்சடி

தேவையானவை: மிகவும் பொடியாக நறுக்கிய கத்தரிக்காய் – கால் கப், பச்சைமிளகாய் – அரை கப், புளி, வெல்லம் – தலா கொட்டைப்பாக்களவு, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், உப்பு, நல்லெண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: பச்சைமிளகாயை உப்பு சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் தாளித்து அதில் கத்தரிக்காயை போட்டு வதக்கவும். கத்தரிக்காய் வதங்கியதும் பச்சை மிளகாய் விழுதை சேர்த்து, புளியை கெட்டியாக கரைத்து விடவும். பிறகு வெல்லத்தை போட்டு மஞ்சள்தூள் சேர்த்து நன்றாகக் கிளறவும். எண்ணெய் பிரிந்து விழுதுபோல வரும்போது இறக்கி விடவும்.

——————————————————————————–

கத்தரிக்காய் சட்னி

தேவையானவை: பொடியாக நறுக்கிய கத்தரிக்காய் – கால் கப், காய்ந்த மிளகாய் – 3, தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன், புளி – கொட்டைப்பாக்களவு, பச்சைமிளகாய் – 2, கடுகு – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கத்தரிக்காயை நன்றாக வதக்கிக் கொள்ளவும். அதனுடன் புளி, உப்பு, பச்சைமிளகாய், காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும். கடுகு, பெருங்காயம் தாளித்துக் கொட்டவும்.

மாங்காய் கத்தரிக்காய் சாம்பார்

தேவையானவை: நறுக்கிய மாங்காய், கத்தரிக்காய் – தலா அரை கப், தக்காளி – 1, புளி – கொட்டைப்பாக்களவு, துவரம்பருப்பு – அரை கப், பச்சைமிளகாய் – 2, சாம்பார் பொடி, எண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், கடுகு – தலா கால் டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிது, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: துவரம்பருப்பில் மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு , காய்ந்ததும் கடுகு தாளித்து அதில் தாக்காளியை நறுக்கிப் போடவும். புளியை நீர்க்கக் கரைத்து விட்டு பச்சைமிளகாயை கீறிப் போட்டு, கத்தரிக்காய், மாங்காய், உப்பு சேர்க்கவும். காய்கள் நன்றாக வெந்ததும் சாம்பார் பொடியை சேர்த்து, கொதித்ததும் பருப்பை கடைந்து ஊற்றவும். நன்றாகக் கொதித்ததும் இறக்கி கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்க்கவும்.

——————————————————————————–

கத்தரி வற்றல் சாம்பார்

தேவையானவை: கத்தரிக்காய் வற்றல், துவரம்பருப்பு – தலா கால் கப், பாசிப் பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், புளி – 2 கொட்டை பாக்களவு, சாம்பார் பொடி – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, கடுகு, பெருங்-காயத்தூள், மஞ்சள்தூள், வெந்தயம் – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது.

செய்முறை: கத்தரிக்காய் வற்றல் செய்யும் முறை: கத்தரிக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கி, மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்கும் தண்ணீரில் போடவும். முக்கால் பதம் வெந்ததும், நீரை வடித்து வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.

கத்தரிக்காய் வற்றலை கொதிக்கும் நீரில் 20 நிமிடம் ஊறவைக்கவும். பருப்புகளை மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் வேகவைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து புளியை கரைத்து அதில் ஊற்றி உப்பு சேர்க்கவும். கொதிக்க ஆரம்பித்ததும் சாம்பார் பொடி, கத்தரிக்காயை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். கடைசியாக வெந்த பருப்பு வகைகளை சேர்த்து கொதித்ததும் இறக்கவும்.

*****************************************************************

No comments:

Post a Comment