30 வகை வடாம், வத்தல்
மரவள்ளி வடாம்
தேவையானவை: வேக வைத்து தோல் உரித்து மசித்த மரவள்ளிக்கிழங்கு – 2 கப், சீரகம் – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: மசித்த கிழங்கில் உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், சீரகம் சேர்த்து பிசைந்து கொள்ளவும். ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் சிறிது எண்ணெய் தடவி, தண்ணீர் தெளிக்கவும். பிசைந்த கிழங்கிலிருந்து சிறிது எடுத்து பிளாஸ்டிக் பேப்பரில் மெல்லிய வட்டங்களாக தட்டவும். வெயிலில் நன்றாக காய வைத்து எடுக்கவும்.
——————————————————————————–
ஜவ்வரிசி தளிர் வடாம்
தேவையானவை: ஜவ்வரிசி – 2 கப், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், பச்சைமிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்.
செய்முறை: ஜவ்வரிசியை 3 முதல் 4 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு வடிய விட்டு உப்பு, பெருங்காயத்தூள் பச்சைமிளகாய் விழுது, எலுமிச்சைச் சாறு சேர்த்து பிசையவும். இலை அல்லது தட்டில் எண்ணெய் தடவி, பிசைந்து வைத்துள்ள ஜவ்வரிசியில் சிறிது எடுத்து மெல்லிய வட்டங்களாக தட்டவும். இவற்றை இடியாப்ப தட்டில் தனித் தனியே வைத்து ஆவியில் வேக விட்டு, வெயிலில் காய வைத்து எடுக்கவும்.
——————————————————————————–
அரிசி ரவை வடாம்
தேவையானவை: அரிசி ரவை – 2 கப், பிரண்டை சாறு (பிரண்டையை நன்றாகக் கழுவி சிறு துண்டுகளாக நறுக்கவும். மிக்ஸியில் போட்டு தேவையான தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டவும்) – 6 கப், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: கனமான பாத்திரத்தில் பிரண்டை சாறை ஊற்றி, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். அதில் அரிசி ரவையை சிறிது சிறிதாக தூவி நன்றாக கிளறவும். அடுப்பிலிருந்து இறக்கி சிறிது நேரம் ஆற விடவும். இதில் சிறிது எடுத்து ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் லேசாக தட்டி காய விடவும். சின்னச் சின்னதாக கிள்ளிப் போட்டும் காய விடலாம்.
இந்த வடாம், பொரி அரிசி வாசனையுடன் சுவையாக இருக்கும்.
——————————————————————————–
அவல் பொரி வடாம்
தேவையானவை: அவல் பொரி – அரை கப், ஜவ்வரிசி – ஒரு கப், எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், பச்சைமிளகாய் விழுது – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, தண்ணீர் – ஒன்றேகால் கப்.
செய்முறை: ஜவ்வரிசியை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் ஒரு கனமான பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, கொதிக்க விடவும். இதில் உப்பு, பச்சைமிளகாய் விழுது சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்க விடவும். பிறகு, ஊற வைத்திருக்கும் ஜவ்வரிசியை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.
இறக்கும்போது அவல் பொரி, எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். லேசாக ஆறியதும், சிறிய கரண்டியில் எடுத்து பிளாஸ்டிக் பேப்பரில் இடவும். வெயிலில் நன்றாக காய்ந்ததும் எடுக்கவும்.
——————————————————————————–
கேழ்வரகு மாவு வடாம்
தேவையானவை: கேழ்வரகு மாவு – 2 கப், ஜவ்வரிசி மாவு – கால் கப், சீரகம் – அரை டீஸ்பூன், பச்சைமிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, தண்ணீர் – இரண்டரை கப்.
செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விடவும். நன்றாக கொதித்ததும் உப்பு, பச்சைமிளகாய் விழுது, சீரகம் சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்க விடவும்.
பிறகு, கேழ்வரகு மாவு, ஜவ்வரிசி மாவு இரண்டையும் ஒன்றாக கலந்து ஒரு கையால் மாவை தூவிக்கொண்டே மறு கையால் கிளறவும். கெட்டியாக வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும். லேசாக ஆறியதும் முறுக்கு அச்சில் மாவை போட்டு பிழிந்து, வெயிலில் காய வைத்து எடுக்கவும்.
——————————————————————————–
பருப்பு வடாம்
தேவையானவை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, பயத்தம்பருப்பு, காராமணி – தலா அரை கப், உப்பு – தேவையான அளவு, காய்ந்த மிளகாய் – 8 முதல் 10, பெருங்காயத்தூள் – இரண்டரை டீஸ்பூன்.
செய்முறை: பருப்பு வகைகளுடன் மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும். அதில் பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக பிசையவும். பிசைந்து வைத்துள்ள பருப்பு கலவையை சின்ன சின்ன உருண்டைகளாகப் பிடித்து வெயிலில் காய வைக்கவும்.
கூட்டு, சாம்பார் போன்றவற்றில் இதை பொரித்துப் போட்டால் சுவை கூடும்.
——————————————————————————–
கொத்தமல்லி வடாம்
தேவையானவை: ஜவ்வரிசி – 2 கப், பச்சைமிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – அரை கப், உப்பு – தேவையான அளவு, தண்ணீர் – 3 கப்.
செய்முறை: ஜவ்வரிசியை முதல் நாள் இரவு ஊற வைக்கவும். அடி கனமான பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்ததும் பச்சைமிளகாய் விழுது, உப்பு சேர்த்து மேலும் 2 நிமிடம் கொதிக்க விடவும்.
அதில், ஊற வைத்த ஜவ்வரிசியை போட்டு வேகும்வரை அடி பிடிக்காமல் கிளறி விடவும். கெட்டியாக ஒட்டாமல் வந்ததும், நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலைகளை சேர்த்து கிளறி இறக்கவும். லேசாக ஆறியதும் ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் மெல்லிய வடைகளாக தட்டி காய வைத்து எடுக்கவும்.
——————————————————————————–
கேரட்-ஜவ்வரிசி வடாம்
தேவையானவை: ஜவ்வரிசி – 2 கப், பச்சைமிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன், கேரட் துருவல் – அரை கப், உப்பு – தேவையான அளவு, கேசரி கலர் – கால் டீஸ்பூன், தண்ணீர் – 3 கப்.
செய்முறை: ஜவ்வரிசியை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள், ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். அதில் பச்சைமிளகாய் விழுது, உப்பு சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்க விடவும்.
ஒரு கொதி வந்ததும் ஊறிய ஜவ்வரிசியை கொட்டி கிளறவும். ஜவ்வரிசி சிறிது வெந்ததும் கேரட் துருவல், எலுமிச்சைச் சாறு, கேசரி கலர் சேர்த்துக் கிளறி இறக்கவும். இதை, ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் சிறிய வில்லைகளாக இட்டு, காய வைத்து எடுக்கவும்.
——————————————————————————–
ஜவ்வரிசி – உருளைக்கிழங்கு வடாம்
தேவையானவை: ஜவ்வரிசி மாவு – 2 கப், வேக வைத்து தோல் நீக்கி, மசித்த உருளைக்கிழங்கு – அரை கப், பச்சை மிளகாய் விழுது – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: மசித்த உருளைக்கிழங்குடன் பச்சைமிளகாய் விழுது, ஜவ்வரிசி மாவு, உப்பு சேர்த்து மிருதுவாக பிசையவும். தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
பிசைந்த மாவை பெரிய துளைகள் உள்ள முறுக்கு அச்சில் போட்டு பிழிந்து, வெயிலில் காய வைத்து எடுக்கவும்.
——————————————————————————–
டபுள் பாய்லிங் அரிசி மாவு வடாம்
தேவையானவை: அரிசி மாவு – 2 கப், தண்ணீர் – இரண்டரை முதல் 3 கப், பச்சைமிளகாய் விழுது – அரை டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: தண்ணீரை கொதிக்க வைத்து, உப்பு, பச்சைமிளகாய் விழுது சேர்த்து மேலும் 2 நிமிடம் கொதிக்க விடவும். அதில் ஒரு கையால் அரிசி மாவை சிறிது சிறிதாக தூவிக் கொண்டே மறு கையால் கிளறி, அடுப்பை அணைத்து விடவும். மாவை கட்டியில்லாமல் நன்றாகக் கிளறி, குக்கரில் வெயிட் போடாமல் வேக விடவும். பத்து முதல் 15 நிமிடம் வெந்ததும் (கையில் தொட்டால் ஒட்டாத பதத்தில்) எடுக்கவும்.
மாவில் சிறிது எடுத்து உருட்டிக் கொள்ளவும். சப்பாத்தி பிரஷரின் மேல் ஒரு சிறிய பிளாஸ்டிக் பேப்பர் வைத்து அதில் உருண்டையை வைத்து, மேலே மற்றொரு பிளாஸ்டிக் பேப்பரால் மூடி அழுத்தினால் வட்டமான வடாம் கிடைக்கும். சப்பத்தி பிரஷர் இல்லையெனில் கைவிரல்களில் எண்ணெய் தடவி, மெல்லியதாக தட்டி வெயிலில் காய வைத்து எடுக்கவும்.
——————————————————————————–
புழுங்கலரிசி வடாம்
தேவையானவை: புழுங்கலரிசி – 2 கப், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: புழுங்கலரிசியை முதல் நாள் இரவே ஊற வைத்து மறுநாள் உப்பு சேர்த்து கெட்டியாக, நைஸாக அரைத்துக் கொள்ளவும். (தண்ணீர் அதிகமாகி விட்டால் அரைத்த மாவை ஒரு பேப்பர் மேல் இருபது நிமிடம் வைக்கவும். தண்ணீர் முழுவதும் வற்றி, மாவு கெட்டியாகிவிடும்.)
இந்த மாவை முறுக்கு அச்சில் போட்டு பிழிந்து, ஆவியில் வேக வைத்து, வெயிலில் காய வைக்கவும். காரம் சேர்க்காததால் இதை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
——————————————————————————–
ஓமப்பொடி வடாம்
தேவையானவை: அரிசி – 2 கப், ஜவ்வரிசி – கால் கப், பச்சை மிளகாய் விழுது – ஒன்றரை கப், எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: அரிசியை நன்றாக களைந்து, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீரை வடிய விட்டு, நிழலில் உலர்த்தி ஜவ்வரிசி யுடன் சேர்த்து மிஷினில் மாவாக அரைத்துக் கொள்ளவும். இந்த மாவை ஜல்லடையால் சலித்து கடாயில் லேசாக வறுக்கவும் (கோல மாவு போல் இருக்க வேண்டும்).
சலித்த மாவை மறுபடியும் கட்டியில்லாமல் சலித்து, பச்சைமிளகாய் விழுது, உப்பு, பெருங்காயத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். இதை ஓமப்பொடி அச்சில் போட்டு பிழிந்து, ஆவியில் வேக விட்டு, வெயிலில் காய வைத்து எடுக்கவும்.
இந்த வடாம் எண்ணெயில் போட்டதுமே பெரியதாக பொரியும்.
——————————————————————————–
ஸ்வீட் ஜவ்வரிசி வடாம்
தேவையானவை: ஜவ்வரிசி – ஒரு கப், தண்ணீர் – ஒன்றரை கப், சர்க்கரை – அரை கப், முந்திரி, பாதாம் துண்டுகள் – 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்.
செய்முறை: தண்ணீரை கொதிக்க வைத்து அதில் ஜவ் வரிசியை வேக விடவும். ஜவ்வரிசி நன்றாக வெந்ததும் அதில் சர்க்கரை, முந்திரி, பாதாம் துண்டுகள், ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.
இது லேசாக ஆறியதும், ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் சிறிய வில்லைகளாக இட்டு, காய வைத்து எடுக்கவும்.
——————————————————————————–
அப்பளப்பூ வடாம்
தேவையானவை: அப்பளப்பூ – ஒரு சிறிய பாக்கெட், அரிசி, ஜவ்வரிசி சேர்த்து அரைத்த மாவு – 2 கப் (அரிசியையும் ஜவ்வரிசியையும் 5:1 என்ற அளவில் எடுத்து மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும்), பச்சைமிளகாய் விழுது – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, தண்ணீர் – 3 கப்.
செய்முறை: அடி கனமான பாத்திரத்தில், தண்ணீரை ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும். நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் அதில் மாவு, பச்சைமிளகாய் விழுதை சேர்த் துக் கிளறவும்.
கெட்டியாக கிளறியதும் அப்பளத்தை பொடித்து, சேர்த்துக் கிளறி இறக்கவும். ஆறியதும் முறுக்கு அச்சில் போட்டு பிழிந்து காய வைக்கவும். பிளாஸ்டிக் பேப்பரில் சிறிய உருண்டைகளாக கிள்ளிப் போட்டும் காய வைக்கலாம்.
——————————————————————————–
பொட்டுக்கடலை வெங்காய வடாம்
தேவையானவை: அரிசி, ஜவ்வரிசி (5:1 விகிதத்தில்) சேர்த்து அரைத்த மாவு – 2 கப், பொட்டுக்கடலை மாவு – அரை கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் – அரை கப், எலுமிச்சைச் சாறு – ஒன்றரை டீஸ்பூன், பச்சைமிளகாய் விழுது – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, தண்ணீர் – மூன்றரை கப்.
செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் உப்பு, பச்சைமிளகாய் விழுது சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்க விடவும். அதில் மாவுகளை சிறிது சிறிதாக தூவி கிளறவும்.
சிறிது வெந்ததும் வெங்காயம் சேர்த்து அடி பிடிக்காமல் 5 நிமிடம் கிளறவும். பிறகு எலுமிச்சைச் சாறு சேர்த்து கலக்கி இறக்கவும். இதை பிளாஸ்டிக் பேப்பரில் சின்னச் சின்ன உருண்டைகளாக கிள்ளிப் போட்டு காய வைக்கவும்.
——————————————————————————–
ஜவ்வரிசி மோர் வடாம்
தேவையானவை: ஊற வைத்த ஜவ்வரிசி – 2 கப், புளித்த மோர் – ஒரு கப், பச்சைமிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: மோரில் பச்சைமிளகாய் விழுது, உப்பு, ஊறிய ஜவ்வரிசி சேர்த்து அடுப்பில் வைத்து கிளறவும். கலவை கெட்டியானதும் அடுப்பை அணைத்து விடவும்.
இந்த கலவையை ஒற்றை முறுக்கு அச்சில் போட்டு பிழிந்து காய வைத்து எடுக்கவும்.
சத்து மாவு வடாம்
தேவையானவை: சத்து மாவு – ஒரு கப் (கடைகளில் கிடைக்கும்), பச்சைமிளகாய் விழுது – அரை டீஸ்பூன், ஓமம் – அரை டீஸ்பூன், ஜவ்வரிசி மாவு – கால் கப், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: சத்துமாவுடன் பச்சைமிளகாய் விழுது, ஓமம், ஜவ்வரிசி மாவு, உப்பு அனைத்தையும் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசையவும். இந்த மாவை முறுக்கு அச்சில் போட்டுப் பிழிந்து, ஆவியில் வேக விட்டு, வெயிலில் காய வைத்து எடுக்கவும்.
——————————————————————————–
பீட்ரூட் வடாம்
தேவையானவை: பீட்ரூட் சாறு – ஒரு கப், (பீட்ரூட்டை துருவி மிக்ஸியில் அரைத்து சாறு எடுக்கவும்), ஊற வைத்த ஜவ்வரிசி – ஒன்றேகால் கப், பச்சைமிளகாய் விழுது – ஒன்றரை கப், எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், ஃபுட் கலர் (சிவப்பு) – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் பீட்ரூட் சாறை ஊற்றி, உப்பு, பச்சைமிளகாய் விழுதை சேர்த்து கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்ததும் அதில், ஊற வைத்த ஜவ்வரிசியை சேர்த்து அடி பிடிக்காமல் கிளறவும்.
பிறகு ஃபுட் கலர், எலுமிச்சைச் சாறை சேர்த்து கிளறி இறக்கவும். இது லேசாக ஆறியதும் கரண்டியால் எடுத்து பிளாஸ்டிக் பேப்பரில் இடவும். நன்றாக காய்ந்ததும் எடுக்கவும்.
——————————————————————————–
புதினா ஸ்பைசி வடாம்
தேவையானவை: ஊற வைத்த ஜவ்வரிசி – 2 கப், பொடியாக நறுக்கிய புதினா – கால் கப் (மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்), மிளகுத்தூள் – 2 டீஸ்பூன், சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், பச்சைமிளகாய் – இஞ்சி விழுது – 2 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, தண்ணீர் – 3 கப் .
செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்ததும் உப்பு, புதினா விழுது, பச்சைமிளகாய் – இஞ்சி விழுது, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
அதில், ஊறிய ஜவ்வரிசியை கொட்டிக் கிளறி, வெந்ததும் எலுமிச்சைச் சாறு சேர்த்து இறக்கவும். லேசாக ஆறியதும் பிளாஸ்டிக் பேப்பரில் பெரிது பெரிதாக இடவும். நன்றாக காயவைத்து எடுக்கவும்.
காரசாரமான வடாம் இது.
——————————————————————————–
கம்பு மாவு மசாலா வடாம்
தேவையானவை: கம்பு மாவு – 2 கப், பொடியாக நறுக்கிய பூண்டு – 2 டீஸ்பூன், தண்ணீர் – 3 கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விடவும். கம்பு மாவை சிறிது தண்ணீரில் கரைத்து, கொதிக்கும் தண்ணீரில் சேர்த்துக் கிளறவும். பிறகு பூண்டு, வெங்காயம், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
எல்லாம் சேர்ந்து கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கவும். பிளாஸ்டிக் பேப்பரில் மெல்லிய வட்டங்களாக தட்டவும். நன்றாக காய்ந்ததும் எடுக்கவும்.
——————————————————————————–
இலை வடாம்
தேவையானவை: அரிசி – 2 கப், கசகசா – 2 கப், சீரகம் – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், பச்சைமிளகாய் விழுது – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து கிரைண்டரில் நைஸாக அரைக்கவும். மாவில் உப்பு சேர்த்து 2 நாள் புளிக்க வைக்கவும். மூன்றாம் நாள் மாவு நன்றாக புளித்திருக்கும். இந்த மாவில் கசகசா, பச்சைமிளகாய் விழுது, சீரகம் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளவும். மாவு ரொம்பவும் கெட்டியாகவோ அல்லது தண்ணியாகவோ இருக்கக் கூடாது.
இரண்டு சொட்டு எண்ணெயை தண்ணீரில் விட்டு, அதில் துணியை நனைத்து மந்தார இலை (அ) வாழை இலையில் தடவவும். ஒரு கரண்டியில் சிறிது மாவை எடுத்து இலையில் மெல்லிய வட்டமாக தடவவும். அதை ஆவியில் வேக வைத்து எடுத்து வெயிலில் காய வைக்கவும். காயாத பச்சை வடாமே சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கும்.
நாள் முழுவதும் வெயிலில் காயவிட வேண்டிய அவசியம் இல்லை. முதல் நாள் 3 மணி நேரம் காயவிடவும். இரவில் அதை பத்து, பத்து வடாமாக அடுக்கி மேலே ஒரு வெயிட் வைக்கவும். மறுநாள் சிறிது நேரம் உலர்த்தவும். மூன்றாம் நாள் மறுபடியும் சிறிது நேரம் உலர்த்தவும். இப்படி உலர்த்துவதால் வடாம் சுருண்டு விடாமல் வட்டமாக இருக்கும். டப்பாவிலும் அதிகமாக வைக்க முடியும்.
——————————————————————————–
ரோஜாப் பூ வடாம்
தேவையானவை: அரிசி, ஜவ்வரிசி (5:1 விகிதத்தில்) சேர்த்து அரைத்த மாவு – 2 கப், சிவப்பு ஃபுட் கலர் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: மாவில் தண்ணீர் விட்டு, ஃபுட் கலர், உப்பு சேர்த்து கெட்டியாக பிசையவும். கை விரல்களில் சிறிது எண்ணெய் தடவி, மாவை ரோஜா இதழ்களாக செய்யவும். இதழின் நடுவில் மாவை சிறியதாக உருட்டி மொட்டு போல வைக்கவும். இதை ஆவியில் வேக வைத்து, பிறகு வெயிலில் காய வைத்து எடுக்கவும்.
குழந்தைகள் பிறந்தநாள் விழாவின்போது பொரித்து வைத்தால் பார்க்க அழகாக இருக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
——————————————————————————–
பூசணிக்காய் குழம்பு வடாம்
தேவையானவை: பூசணி துருவல் – ஒரு கப், உளுத்தம்பருப்பு – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 5 முதல் 8, உப்பு – தேவையான அளவு, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்
செய்முறை: உளுத்தம்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து காய்ந்த மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் பூசணிக்காய் துருவல், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக பிசையவும். பிசைந்த மாவை பிளாஸ்டிக் பேப்பரில் சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு, நன்றாக காய்ந்ததும் எடுக்கவும்.
குழம்பு செய்யும்போது இதைப் பொரித்துப் போட்டால், சுவையும் மணமும் கூடும்.
——————————————————————————–
வாழைத்தண்டு சாறு வடாம்
தேவையானவை: ஜவ்வரிசி – ஒரு கப், வாழைத்தண்டு சாறு – ஒன்றேகால் கப், உப்பு – தேவையான அளவு, பச்சைமிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்.
செய்முறை: ஜவ்வரிசியை வாழைத்தண்டு சாறில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். அதை அடுப்பில் வைத்து கிளறவும். லேசாக கொதித்த தும் பச்சைமிளகாய் விழுது, உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.
பிறகு அதில் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கிளறவும். லேசாக ஆறியதும் பிளாஸ்டிக் பேப்பரில் வட்டமாக இட்டு, காய்ந்ததும் எடுக்கவும்.
——————————————————————————–
சுக்காங்காய் வத்தல்
தேவையானவை: சுக்காங்காய் (மளிகை கடைகளில் கிடைக்கும்) – ஒரு கப், சிறிது புளி, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைத்த விழுது – 3 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: சுக்காங்காயை நன்றாகக் கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கவும். இதில் புளி – மிளகாய் விழுதைத் தடவி, அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு இதை வெயிலில் காய வைத்து எடுக்க வும்.
இதில் வத்தக் குழம்பு வைத்தால் வாசனை ஊரைக் கூட்டும்.
——————————————————————————–
தாமரைத் தண்டு வத்தல்
தேவையானவை: சிறிய துண்டுகளாக நறுக்கிய தாமரைத் தண்டு – 2 கப், (காய்கறி கடைகளில் சொல்லி வைத்து வாங்கவும்), புளித் தண்ணீர் – அரை டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: தாமரைத் தண்டை ஒருநாள் முழுக்க வெயிலில் காய வைக்கவும். மறுநாள் இதனுடன் புளித் தண்ணீர், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து வேக விடவும். அதிகமாக குழையவிடக் கூடாது.
பிறகு தண்ணீரை வடிகட்டி வெயிலில் நன்றாக 2 (அ) 3 நாட்கள் காய வைத்து எடுக்கவும்.
——————————————————————————–
மேக்ரோனி வடாம்
தேவையானவை: மேக்ரோனி – ஒரு கப், பச்சைமிளகாய் விழுது – 2 டீஸ்பூன், ஊற வைத்த ஜவ்வரிசி – ஒன்றரை கப், மஞ்சள் ஃபுட் கலர் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, தண்ணீர் – 3 கப்.
செய்முறை: ஜவ்வரிசியில் பச்சைமிளகாய் விழுது, உப்பு, தண்ணீர் சேர்த்து நன்றாகக் காய்ச்சவும். மேக்ரோனியை கொதிக்கும் தண்ணீரில் போட்டு 2 முதல் 3 நிமிடம் சமைக்கவும். பிறகு வடிய விட்டு குளிர்ந்த நீரில் அலசி ஆற விடவும்.
காய்ச்சி வைத்துள்ள ஜவ்வரிசி கலவையுடன் வெந்த மேக்ரோனி, ஃபுட் கலர் சேர்த்து 5 நிமிடம் ஊற விடவும். பிறகு வெயிலில் காய வைத்து எடுக்கவும்.
——————————————————————————–
பிரண்டை வடாம்
தேவையானவை: அரிசி, ஜவ்வரிசி (5:1 விகிதத்தில்) கலந்து அரைத்த மாவு – 2 கப், பிரண்டை சாறு – 2 கப், பச்சைமிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்.
செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் பிரண்டை சாறை ஊற்றிக் கொதிக்க விடவும். அதில் உப்பு, பச்சைமிளகாய் விழுது, பெருங்காயத்தூள் சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்க விடவும்.
கொதித்ததும் மாவை ஒரு கையினால் தூவி மறு கையால் கெட்டியாக அடி பிடிக்காமல், மிதமான தீயில் கிளறவும். எலுமிச்சைச் சாறு சேர்த்து மேலும் சிறிது நேரம் கிளறி இறக்கவும். அந்த மாவை ‘தென்னம் பூ’ அச்சில் போட்டு பிழியவும். 2 முதல் 3 நாட்கள் வரை காய வைத்து எடுக்கவும்.
——————————————————————————–
தக்காளி வடாம்
தேவையானவை: ஊற வைத்த ஜவ்வரிசி – 2 கப், தக்காளி சாறு – 2 கப், ஆரஞ்சு ஃபுட் கலர் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, பச்சைமிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்.
செய்முறை: அடி கனமாக பாத்திரத்தில் தக்காளி சாறை ஊற்றி உப்பு, பச்சைமிளகாய் விழுது சேர்த்துக் கொதிக்க விடவும். பிறகு ஜவ்வரிசியை சேர்த்துக் கிளறவும்.
இறக்கும்போது ஃபுட் கலர், பெருங்காயத்தூள் சேர்க்கவும். லேசாக ஆறியதும் மாவை ஒரு கரண்டியால் எடுத்து பிளாஸ்டிக் பேப்பரில் வட்டமாக இடவும். நன்றாக காய வைத்து எடுக்கவும்.
——————————————————————————–
பாகற்காய் வத்தல்
தேவையானவை: பாகற்காய் – 4, புளித் தண்ணீர் – ஒரு கப், மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: பாகற்காயை வட்டமாக நறுக்கி, புளித் தண்ணீரில் வேக வைக்கவும். இதில் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து மேலும் 2 நிமிடம் வேக விடவும். தண்ணீரை வடிகட்டி, பாகற்காயை வெயிலில் காய வைத்து எடுக்கவும்.
குழம்பில் வறுத்து சேர்க்கலாம். சாதாரணமாகவும் வறுத்து சாப்பிடலாம்.
*************************************************************************************************
நன்றி!
ReplyDelete